வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 2 ஜூன், 2011

எதுக்காகப் பொருள் தேடறீங்க..?


பொருள் தான் வாழ்க்கையின் அடித்தளம்.
பொருள் இல்லாதவரை இந்த உலகில் நாய் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை!
அதனால் தான் எல்லோருமே பொருள் தேடுகிறோம்.

நாம் தேடும் பொருள் யாருக்காக..?

தனக்கு!
தன் குடும்பத்துக்கு!!
அடுத்து வரும் தன் தலைமுறைக்கு!!!
அடுத்தடுத்து வரும் தன் தலைமுறைகளுக்கு!!!!


என்ற பதிலே பெரும்பாலோனரிடமிருந்து வரும்.
சரி! இதுதானே சராசரி மனித வாழ்க்கை!

இதையும் தாண்டி சிந்தித்தவர்கள் தான் மாமனிதர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதோ சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை.

“தம்மை விரும்பி வாழ்வோருக்கு உதவி செய்து அவர்களைக் காத்தலால் வரும் மகிழ்ச்சி ஒன்று,
தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக்கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று.

இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்!
அதனால் பொருளைத் தேடவேண்டும் என ஓயாமல் நினைந்தான் தலைவன்.“

தன் குடும்பத்தின் வறுமை நீங்கவேண்டுமே என்று எண்ணவேண்டி தலைவன்,
விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவி செய்யப் பொருள்வேண்டுமே என்று எண்ணுகிறான்.

தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் கலந்திருப்பதால் தானோ சங்ககாலத்தைப் பொற்காலம் என்கிறோம்.

பாடல் இதோ..

தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி தோழி கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!

அகநானூறு 151
பாலை
காவன் முல்லைப் பூதரத்தனார்.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

ஆடுகளப் பறை

தோழி..
வாழ்க! பாலை நிலத்தில் குட்டையான வாகைமரங்கள் கோடைக்காற்றில் உலர்ந்து மிகுதியான காற்று வீசும்போது,கூத்தியர் ஆடும் போது முழங்கும் பறைபோல, அவற்றின் விளைந்த நெற்றுகள் ஒலிக்கும்.

பல்லி சோதிடம்

அங்கு கற்குவியலில் கள்ளிச் செடிகள் நிற்கும்.
பல்லி, சோதிடன் போல அவ்வழியே செல்வோருக்கெல்லாம் நிமித்தம் கூறும்.
அத்தகைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் முன்பு நம்மிடம் அருளோடு இருந்தார்.

ஈத்துவக்கும் இன்பம்

இப்போது தம்மை விரும்பி இருப்போரை ஆதரித்து!
தாம் விரும்பும் உறவுகளுடன் இயைந்து மகிழ்ந்திருக்க இயலாதவொரு வறுமையுற்றார். அதனால் வாழ்க்கைக்குச் செல்வமே துணையாகும் என்று நினைந்து நம்மிடம் அருள்கூர்வதைக் கைவிட்டார். வறுமையை நீக்கும் பொருள் மகிழ்வைத் தரவல்லது. விருந்தினரையும், சுற்றத்தாரையும் மகிழச் செய்வது.
“அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் தோன்றும் இன்பமானது,
இன்பங்களுள் தலைசிறந்தது.“ என்று உணர்ந்தவராக என்னை நீங்கிப் பொருள் நாடிச் சென்றார்!
நாம் என்ன செய்யமுடியும்..? என்கிறாள் தலைவி.

பாடல் வழியே.
1. விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவுவதே இல்லற வாழ்வின் அடிப்படைக் கடமை என்பது உணர்த்தப்படுகிறது.
2. பறையொலிக்கு ஏற்ப ஆடுகளமகள் (கூத்தியர்)ஆடும் வழக்கம் சுட்டப்படுகிறது.
3. சங்ககாலம் தொட்டே பல்லியின் ஒலியை, மக்கள் நிமித்தமாகக் கருதியமை உணரமுடிகிறது.

(பொருள் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்மல்ல -
தங்கள் மேற்பார்வைக்கு “துபாயா அபுதாபியா?)

8 கருத்துகள்:

  1. ஏற்க்கனவே ஒருமுறை தங்களிடம் கூறியிருந்தேன் "என் பள்ளிப்பருவத்தில் வந்த எங்கள் தமிழய்யா புலவர் சின்னமாடசாமி அவர்களே வந்து புறநானுற்று பாடல் நடத்தியது போலிருந்தது!!!நண்பரே "அதே நிகழ்வே என் கண் முன் தோன்றுகிறது நண்பரே ..
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் கலந்திருப்பதால் தானோ சங்ககாலத்தைப் பொற்காலம் என்கிறோம்.//
    Nice.

    பதிலளிநீக்கு
  3. சங்ககாலத்தின் பழக்கவழக்கங்களை அருமையாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்!!அருமையான தகவல்கள் அனைத்தும்...உண்மையாகவே பொற்காலம் தான்....

    பதிலளிநீக்கு
  4. இன்றைய எனது இடுக்கையில் இது குறித்து நானும் பதிவிட்டுளேன்

    பதிலளிநீக்கு
  5. //விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவி செய்யப் பொருள்வேண்டுமே என்று எண்ணுகிறான்.//

    நல்ல பொதுநல நோக்கு கொண்டவன். அவன் தான் மனிதன்.

    பதிலளிநீக்கு
  6. மகிழ்ச்சி மருதா
    நன்றி இராஜேஷ்வரி
    நன்றி இராஜா
    மகிழ்ச்சி சுடர்விழி
    கண்டேன் சர்புதின் நன்று
    தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா
    நன்றி சசி.

    பதிலளிநீக்கு