
தமிழன்…..
“சிட்டி“யில் “காலனி“யில் “அப்பார்ட்மென்“டில் “பிளாக்“கில் “ப்ளோரி“ல் “டோர்நம்பரி“ல் குடியிருக்கிறான்.
தமிழன்……
“மம்மி“யும் “டாடி“யும் “அங்கிளு“ம் “ஆன்டி“யும் “பேபி“யும் ரிளேடிவ்“சும் “ப்ரென்ட்சு“மாய் வாழ்கிறான்.
தமிழன்……
“டூத்பேஸ்ட்“டால்“பிரஷ்“ஆல் பல் தீட்டுகிறான்.“ஹேர்ஆயிலை“ “கிரீமை“ தலைக்கு வைக்கிறான்.“பவுடரை“ பேஸ்“கிரீமை முகத்தில் இடுகிறான்.
“ப்ளேடால்“ சேவிங்“ ரேசரால் முகமயிர் மழிக்கிறான். “சர்ட்டை“பேன்டை“ உடலில் அணிகிறான். “சாக்ஸை“சூசை“ காலுக்குப் போடுக்கறான்.
தமிழன்……
“ஸ்டோரீஸ்“ நாவல்ஸ்“ படித்து - “ஸோங்ஸ்“ கேட்டு “டான்ஸ்“ட்ராமா“ பார்த்து - “சினிமா“டிவி“ சுவைத்து மகிழ்கிறான்.
தமிழன்…….
கடையில் “பில்“ கட்டுகிறான். மருத்துவமனையில்“டோக்கன்“ கேட்கிறான்.பேருந்தில் “டிக்கெட்“ கேட்கிறான்.
பால் விற்பனை நிலையத்தில் “கார்டு“ கேட்கிறான்.
தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருடவருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் “Beware Of Dogs" என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்திருக்கிறான்.
தமிழனா தமிங்கிலனா… காசியானந்தன். பக்-44-45.
இதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் நானறிந்தவரை...
சிட்டி - நகரம்
காலனி - கூட்டுக் குடியிருப்பு
அப்பார்ட்மென்ட் -அடுக்ககம்
பிளாக் - கட்டிடத்தொகுதி
ப்ளோர் - தளம்
டோர் - கதவு
நம்பர் - எண்
மம்மி - அம்மா
டாடி - அப்பா
அங்கிள் - மாமா
ஆன்டி - அத்தை
பேபி - குழந்தை
ரிளேடிவ் - உறவினர்
ப்ரெண்ட்ஸ் - நண்பர்கள்
டூத்பேஸ்ட் - பற்பசை
பிரஷ் - பல்துலக்கி
ஹேராயில் - தலைக்குத் தேய்க்கும் எண்ணை
கிரீம் - பசை,களிம்பு
பவுடர் - தூள், பொடி
பேஸ் கிரீம் - முகப் பசை
ப்ளேடு - மழிதகடு
சேவிங் - மழிப்பு
ரேசர் - மழிப்புக் கருவி
சர்ட் - சட்டை
பேன்ட் - கால்சட்டை
சாக்ஸ் - காலுறை,மூடணி
சூ - காலணி
ஸ்டோரி- கதை
நாவல் - புதினம்
ஸோங் - பாடல்
டான்ஸ் - ஆடல்
ட்ராமா - நாடகம்
சினிமா - பெரிய திரை
டிவி - தொலைக்காட்சி
பில் - விலைப்பட்டியல்
டோக்கன் - அடையாள அட்டை
டிக்கெட் - பயணச்சீட்டு
கார்டு - அட்டை