எத்தனையோ பண்பாட்டு, மொழித்தாக்கங்களிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உயிரோடு திகழ்வது நம் தமிழ்மொழி. இந்த நிலையும் கடந்து போகும். தமிழ்மொழி நிலைத்துவாழும் என்ற நம்பிக்கையோடு…….
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்-பகுதி-1 ல் வடமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டினேன். பலநண்பர்களும் ஆர்வத்தோடு வந்து கருத்துத் தெரிவித்தமை மகிழ்வளிப்பதாக இருந்தது. அதில் சிலர்…
◊ வடசொற்களில் சில தமிழுக்குரியது என்றும், தமிழ்ச்சொற்கள் சில வடசொற்கள் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
கருத்துரையாளர்களின் மொழிப்பற்று பெருமிதம் கொள்வதாக இருந்தது.
◊ கால்டுவெல் அறிஞர் வந்து சொல்லும் வரை வடமொழிதான் இந்தியாவில் செம்மொழியாகக் கருதப்பட்டது. அவர் தான் “ திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்ற நூல் வாயிலாக “ திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழ்“ என்ற கருத்தை உலகறியத் தெரிவித்தார். அதன் பின்னர் தான் தமிழி்ன் தொன்மை, செழுமை, வளமை, இலக்கிய நயம் ஆகியவற்றை உலத்தார் அறிந்துகொண்டனர். தமிழில் தொல்காப்பியர் பெறுமிடத்தை வடமொழியில் பாணீனி பெறுகிறார்.
◊ தமிழ்மொழி பழமையானது என்று நாம்கருதும் அதே சூழலில் பிறமொழியின் தொன்மையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
◊ நம்மில் பலர் தமிழ் மொழியைப் பேசத் தயங்குவதையும், பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக உள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

◊ தமிழின் தொன்மையையும், வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். இவர் தம் கட்டுரைகள், “ஞாலமுதல் மொழி தமிழ்“ என்பதை பெருங்குரலிட்டு மொழிவனவாகும்.
◊ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொல்லும் தகுதிவாய்ந்த ஒரே மொழி நம் தமிழ்மொழி. அதனால் கருத்துச் சுதந்திரம் நிறைந்த இக்காலத்தில் தமிழின் தொன்மையும், வளமும், வேர்ச்சொல் குறித்த விழிப்புணர்வும் இன்றைய ஊடகத்துறைக்குத் தேவையெனக் கருதுகிறேன்.
தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களாக உணரச்சிப் பாவலர் காசியானந்தன் அவர்கள் கூறும் சான்று…
“வீட்டுக்கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும் கோணிப்பையில் இருந்த பப்பாளிப்பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும் கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ ரிக் ஷாவில் தப்பி ஓடியபோது தகவல் அறிந்த போலீ்ஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக்கட்டின“
செய்தி ஏட்டில் திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான் என நினைக்கிறோம். ஆனால்… தமிழா இது..?
சாவி போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
பீரோ - பிரெஞ்சு (பேழை)
துட்டு - டச்சு (பணம்)
கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
பப்பாளி - மலாய் (பப்பாளி)
சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
வயது- சமஸ்கிருதம் (பருவம்)
கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
தகவல் - அரபி (செய்தி)
போலீஸ் - இலத்தீன் (காவலர்)
ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்)
துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
தோட்டா - உருது(குண்டு)
அடைப்புக்குள் உள்ள சொற்கள் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களாகும்.
எந்த மொழியையும் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.