வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 1 டிசம்பர், 2010

கலுழ்ந்தன கண்கள்…


தலைமக்களின் ஆழமான காதலைக் கண்டு அவர்களைச் சேர்த்துவைக்க எண்ணினாள் தோழி. அதனால் பெற்றோர் அறியாது அவர்கள் உடன்போக்கில் செல்ல ஏற்பாடு செய்தாள். தலைவியின் வளர்ப்புத்தாயும் தன்தாயுமான செவிலியிடம் சென்று தலைவியின் காதலையும் தெரிவித்தாள்(அறத்தொடு நிற்றல்).

பின்னர் ஆவலாகக் காத்திருந்த தலைவனிடம் சென்று...

“தலைவி உன்னோடு வரமாட்டாள்..
அவள் உன்னுடன் வரலாம் என்ற முடிவுடன்தான் தம் சிலம்பைக் கழற்றிப் பந்தின் அருகே வைக்கச் சென்றாள். ஆனால் அப்போது அவளுக்குத் தம் தோழியரின் நினைவு வந்துவிட்டது. தம் சிலம்பைக் காணும் போது தம் தோழியர் தம் நினைவால் மிகவும் வருந்துவரே அவர்கள் பாவம் என்று மிகவும் கண் கலங்க அழுதனள் என்றாள்.

பாடல்....

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇ பல்மாண்
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண்தொறும் நோவர் மாதோ
அளியர் அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன்வரைந்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே

கயமனார்

நற்றிணை-12

துறை – தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.


பாடலின் உட்பொருள் இதோ....

 தயிர்ப்பானையின் முடைநாற்றம் நீங்க விளம்பழத்தை இட்டுவைத்துள்ளனர். அதனால் விளம்பழத்தின் மணம் எங்கும் கமழ்கிறது.
 அத்தயிர்ப்பானையைத் தயிர் ஆடித்தேய்த்ததால் மத்தின் தண்டு தேய்ந்திருக்கிறது.வெண்ணை தோன்றத் தேய்தலால் எங்கும் மத்தின் ஓசை முழங்குகிறது. இத்தகைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதில், தலைவனுடன் செல்ல எண்ணிய தலைவி, பருக்கக்கற்கள் போட்டு செய்யப்பட்ட தன் சிலம்பைக் கழற்றிப் பந்தின் அருகே வைக்கச் சென்றாள். அப்போது தலைவியின் உள்ளத்தில்,

“என் தோழிகள் இவற்றைக் காணும் போதெல்லாம் வருந்துவார்களே!
அவர்கள் இரங்கத்தக்கவர்கள்” என்று எண்ணினாள் அப்போது
அவளுக்கு உன் நினைவும் வந்தது. என்ன செய்வது என்று அறியாது
அவளது கண்கள் அளவிடமுடியாத அளவுக்குக் கலங்கின என்று தோழி
தலைவனிடம் உடன்போக்கின் விளைவினையும், தலைவியின்
இயலாமையையும், மறைமுகமாக ....

தலைவா நீ ஊரறிய திருமணம் செய்வதே சிறந்தது! யாரும் அறியாது உடன்போக்கில் தலைவியை அழைத்துச் செல்வது உனக்கு சிறப்பாகது என்பதையும் அறிவுறுத்துகிறாள்.

பாடலின் வழியே....
 தயிர்ப்பானையின் முடைநாற்றம் நீங்க விளம்பழத்தைப் பானையில் இட்டுவைக்கும் சங்ககால மக்களின் வழக்கத்தை அறியமுடிகிறது.
 பருக்கைகல் போட்டு சிலம்பணியும் சங்ககால பழக்கமும், திருமணத்திற்குப் பின்னர் சிலம்பு அணிவதில்லை என்ற அக்கால மரபும் புலப்படுத்தப்படுகிறது.
 தம் சிலம்பைக் காணும் போதெல்லாம் தோழியர் மனம் வாடுவார்களே என்று கலங்கும் தலைவியின் கண்கள் ஒருகண்ணில் நட்பையும், மறுகண்ணில் காதலையும் தாங்கி நிற்பது பாடலுக்குச் சுவைகூட்டுவதாகவுள்ளது.
 செவிலிக்குச் சொல்லியும் சேர்க்கமுடியாத காதலை உடன்போக்கிலாவது சேர்த்துவைக்கலாம் என்று எண்ணிய தோழியே பின் உடன்போக்கு வேண்டாம் என்று தலைவனை ஆற்றுப்படுத்துவது...
மறைமுகமாகத் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாகவும், உடன்போக்கைவிட பெற்றோர் சேர்த்துவைக்கும் திருமணமே சிறந்தது என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது.

15 கருத்துகள்:

  1. எவ்ளோ அறிவுபூர்வமா எழுதுகிறீர்கள். நானும் எவ்ளோவோ முயற்சி பண்றேன். இந்த மாதிரி எழுத வரமாட்டேங்குது..

    பதிலளிநீக்கு
  2. அறத்தொடு நிலையை அருமையாக எடுத்து இயம்பிய முனைவர் அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே புதிய டெம்ப்ளேட்டே மிகவும் அழகாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. இந்த தளத்தில் தங்களுடைய படைப்புகளை வெளியிடுங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தங்களுடைய படைப்புகள் சென்றடைய விரும்புகிறேன் நன்றி

    புதியதாக ஆரம்பிக்க பட்ட தளம் http://tamil.forumta.net/forum.htm

    பதிலளிநீக்கு
  5. கலுழ்தன கண்கள்...சரியாக நண்பரே...எனக்கு அதன்அர்த்தம் புரியவில்லை...

    பதிவு அருமை....வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  6. Very nice flow.Good article
    Very nice flow.Good article
    Very nice flow.Good article
    Very nice flow.Good article
    Very nice flow.Good article
    Very nice flow.Good article
    Very nice flow.Good article

    பதிலளிநீக்கு
  7. //மறைமுகமாகத் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாகவும், உடன்போக்கைவிட பெற்றோர் சேர்த்துவைக்கும் திருமணமே சிறந்தது என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது//

    குணா,

    நம் சங்க இலக்கியங்கள் எப்பவும் வாழ்வோடு இணைந்து, வாழ்வை போதிப்பவைகளே.

    பகிர்வு அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. @கவிதை காதலன்தங்கள் கவிதகளில் காதல் நயம் தோய்ந்திருக்கிறது நண்பா

    பதிலளிநீக்கு
  9. @வேலன். 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் அதனால் கொஞ்சம் புரிதலில் சிக்கல் இருக்கத்தான் செய்யும் நண்பா

    பதிலளிநீக்கு