Friday, May 1, 2009

சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.

தமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே........
இணையத்தில் இன்றைய நிலையில் மூல நூல்கள் நிறைவாகக் கிடைக்கின்றன. ஆய்வு நூல்கள் குறைவு . பிடிஎப் வடிவிலோ, எச்.டி.எம்.எல் வடிவிலோ இக்கட்டுரைகளை வெளியிட்டால் தமிழாய்வு மேலும் வளரும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.
(http://74.220.219.81/~noolaham/project/02/175/175.htm?uselang=ta
/
/" )

இது நூலகத்தின் இணைய முகவரியாகும். இங்கு எட்டு அரிய ஆய்வுக்கட்டுரைகள் html வடிவில் காணக் கிடைக்கின்றன. இதுபோன்ற பதிவுகள் இன்னும் வளரவேண்டும்.

நூல் விபரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.
இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது.

சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
ஆகிய எட்டு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் 99ஆவது நூலாகும்.


பதிப்பு விபரம்


சங்க இலக்கிய ஆய்வுகள். அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்; தொகுதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002, (கொழும்பு: கௌரி அச்சகம்). ix + 190 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14.5 சமீ., ISBN: 955-8637-15-7.

சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

இன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் குறைவு . இன்றுவரை தமிழகத்திலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளை தொகுத்து வரையறை செய்யவில்லை. அதனால் திரும்பத்திரும்ப ஒரே ஆய்வுத் தலைப்புகளைப் பலரும் ஆய்வுசெய்யும் நிலை உள்ளது. ஒரே தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். எனினும் இனி வரும் ஆய்வடங்கல்களில் ஆய்வுத்தலைப்பு , அதன் உள்ளடக்கம் என வரையறைசெய்து தொகுத்தால் எதிர்காலத்தில் தமிழாய்வு மேலும் சிறக்கும். ஆய்வடங்கல் தயாரிப்பது என்பது தனிநபர் செய்யத்தக்க பணியன்று அதற்கு செம்மொழி ஆய்வு நிறுவனம்,பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியமாகும். அரசு உதவி பெற்று இதுவரைத் தொகுக்கப்பட்ட ஆய்வடங்கல்கள் கூட ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர் நெறியாளர், கல்வி நிறுவனம் , ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு என்ற அடிப்படையில் தான் உள்ளது. அதோடு அவ்வாய்வின் உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டால் நலமாக இருக்கும் .ஏனென்றால் தமிழில் சில களங்கள் மேலும் மேலும் ஆய்வு செய்யத்தக்கனவாக இருக்கும் .


அந்த அடிப்படையில் சங்க இலக்கியம் வழி ஆய்வுசெய்வோருக்காக இப்பகுதியில் சங்கத்தமிழாய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நான் முனைவர் பட்டம் செய்த போது(ஐந்து வருடங்களுக்கு முன்பு) இணையத்தில் சங்கத்தமிழாய்வு நூல்களைத் தேடினேன் அப்போது கிடைத்த செய்தி மிகவும் குறைவு. இன்றும் அந்நிலையே உள்ளது. இணையம் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில்,பல்வேறு பதிப்பகங்களும் நூல்களைப் பட்டியலிட்டுள்ளன. அவையும் உள்ளடக்கங்களோடு பட்டியலிடப்பட்டால் நன்றாக இருக்கும்.


கல்விப்புலம் சார்ந்த தமிழன்பர்கள் பலரும் இன்று வலைப்பதிவு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாமறிந்த ஆய்வு நூல்களைத் தங்கள் வலைப்பதிவில் உள்ளடக்கங்களோடு குறிப்பிட்டுச் சென்றால் இனிவரும் தமிழாய்வாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். ஒரே தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிலை மாறவும் தமிழாய்வு மேலும் சிறப்புறவும் இது அடிப்படையாக அமையும்.

(சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி)


சங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளை சங்ககால வரலாறாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் இந்நூல் சங்க கால வரலாற்றில் சில பகுதிகளை ஆழமாக ஆய்ந்து எடுத்தியம்புகிறது.

உள்ளுறைI தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்

1.தொல்காப்பியர் காலம்
2.தொல்காப்பியர் காலம்- வேங்கடம்
3.தொல்காப்பியர் காலம்-ஓரை
4.தொல்காப்பியர் காலம்-பாண்டியரின் தமிழ்ச்சங்கம், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும்.
5.தொல்காப்பியர் காலம்- தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்.
6.இணைப்பு – எழினி – யவனிகா

II. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை1. ஐயர் யாத்தனர் கரணம்
2. வேந்தனும் வருணனும்
3. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்
4. சங்க காலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்
5. தொல்காப்பிய ஆய்வுரை
6. நடுகல் என்னும் வீர வணக்கம்
7. பெரும்படை
8. வான் மண்ணுதல்
9. கழுதை ஏர் உழுதல்
III. சங்க காலத்து நகரங்கள்

1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டணம்
2. சங்க காலத்து மதுரை மாநகரம்
3. இணைப்பு ஆல் – நீர்

நூல் வெளியீட்டகம்

பாவை பப்ளிகேசன்
142 ஜானி ஜான் கான் சாலை
இராயப்பேட்டை, சென்னை

நூல் வெளியான ஆண்டு
2005

தமிழில் பிடிஎப் செய்யலாம்…

பிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக்கமாகும். இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.

பல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.

(http://getitfreely.co.cc/content/cute-pdf-creater//" )

இவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும்.

நாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியைச் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.

எவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்.

இலக்கியத் திரட்டி